சென்னை:
மத்தியஅரசு அமல்படுத்த உள்ள தேசிய கல்வி கொள்கையான மும்மொழி கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த முடியாது, இருமொழிக் கொள்கைதான் தொடரும் என்று தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறி உள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதுவார் என்றும் தெரிவித்து உள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என்பதை மீண்டும் தெளிவுபடுத்தினார். கல்வித்துறையில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தவர், இந்த புதிய கல்வி ஆண்டில் 8 வகுப்புகளுக்கு பாடத் திட்டம் மாற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
2-ம் வகுப்பு, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
3 ஆண்டுகளில் பள்ளி பாடத்திட்டங்கள் மாற்றப்படும் என்ற கொள்கை திட்டத்தை இரண்டே ஆண்டில் செயல்படுத்தி உள்ளோம் என்றும், மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் அடங்கிய புத்தகங்களை நாளை மறுநாள் (3-ந்தேதி) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாணவர்களுக்கு வழங்கி தொடங்கி வைப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் அண்ணா, புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வகுத்த கொள்கைப்படி தமிழ், ஆங்கிலம் இருமொழி கொள்கை நீடிக்கும் என்றும், மத்திய அரசு அமல்படுத்த உள்ள மும்மொழி கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தமுடியாது என்று கூறியவர், இது தொடர்பாக முதல்வர் மத்தியஅரசுக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் கூறினார்.