பொங்கல் திரைப்பட புக்கிங் ஆரம்பித்து விட்டது என்ன படம் முதலில் போகலாம் என்றார் கணவர். ரஜினி முருகன் என்றேன் நான். ஆன் லைன் புக்கிங் பார்த்தபோது ரஜினி முருகன் படத்திற்கு இன்றைய காட்சிகள் புக் ஆகிவிட்டன. அடுத்து தாரை தப்பட்டை – அதுவும் அரங்கம் மழுக்க நிரம்பி விட்டது. கெத்து அல்லது கதகளியா என்று டாஸ் போட்டபோது கெத்துக்குத் தலை விழுந்தது. அது ஒரு குறியீடு என்று அப்பொழுது புரியவில்லை. இன்று பார்க்கும்போது தலை அறுபட்டு விழுந்தது!
படம் இரண்டு மணி நேரம் தான். இரண்டு யுகமாகக் கழிந்தது. திரைக் கதை எழுதும் நல்ல எழுத்தாளர் எவரேனும் இப்படத்தைப் பார்த்தால் திரை அரங்கிலேயே உயிரை மாய்த்துக் கொள்வர். அங்கேயும் இங்கேயுமாக அலைபாய்கிறது கதை. ஹீரோ சமத்துப் பையனாக, லைப்ரேரியனாக இடைவேளை வரை வருகிறார். ஆனால் திடீரென்று தந்தையைக் காக்கும் பொருட்டு அவர் எடுக்கும் வீர தீர அவதாரத்துக்கு என்ன முன் பயிற்சி எடுத்தார் என்பது புரியவில்லை. இயல்பிலேயே கெத்து இரத்தத்தில் ஊறியிருந்து அப்பொழுது வெளிப்பட்டது என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் போல!
கண்ணைக் கவரும் இயற்கை எழில் கொஞ்சும் குமிளி/கொடைக்கானல் பகுதியைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி. நன்றி ஒளிப்பதிவாளர் சுகுமார். சத்தியராஜ் ஈகோ பார்க்காமல் உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக வருகிறார். அவர் பங்கிற்கு மிக நன்றாக செய்துள்ளார். எமி ஜேக்சன் ஹீரோயின். ஐ படத்தில் வந்த பெண்ணா என்று சந்தேகம் வரும் அளவு இப்படத்தில் ரொம்ப சுமாராக இருக்கிறார்.
படத்தில் இரண்டு வில்லன்கள். ஒன்று, கதாசிரியரே வில்லன் என்று கதையில் கொண்டு வரும் விக்ராந்த். இன்னொருவர் மறைமுக வில்லன். அவர் பெயர் ஹேரிஸ் ஜெயராஜ். அவர் படத்துக்கே வில்லன். அதுவும் பின்னணி இசையின் மூலம் திரை அரங்கில் ஒவ்வொருவரையும் தனித் தனியாகக் கொன்று விடுகிறார்.
ரியல் வாழ்க்கையில் பணக்கார வீட்டுப் பிள்ளை ஸ்டாலின். ஆனாலும் பணத்தை வேஸ்ட் பண்ணாமல் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக கதை, திரைக் கதையைத் தேர்ந்தெடுத்து தயாரித்து நடிக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
கெத்து – வெத்து! {படத்துக்குப் பெயர் வைக்கும்போது இப்படி ரைமிங்கா கிண்டல் செய்ய ஏதுவா பெயர் வைக்காதீங்கப்பா }
சுஷிமா சேகர்
https://amas32.wordpress.com/