கியோஞ்சர், ஒரிசா
பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த 25 வயதான பி டெக் பட்டதாரியான சந்திராணி முர்மு மக்களவையின் மிக இளைய உறுப்பினர் ஆவார்.
ஒரிசா மாநிலத்தில் உள்ள கியோஞ்சர் தொகுதியில் இந்தியாவில் மொத்தமுள்ள இரும்பு தாதுக்களில் 20% உள்ளது. ஆனாலும் இங்குள்ள மக்கள் மிகவும் வறுமையில் உள்ளனர். இந்த பகுதியை இங்குள்ள மக்கள் ”வறுமையில் வாடும் மக்கள் உள்ள வளமான பூமி” என அழைப்பது வழக்கமாகும். இந்த தொகுதி தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதி ஆகும்.
இந்த தொகுதியில் பிஜு ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சந்திராணி முர்மு வெற்றி பெற்றுள்ளார். இவர் கடந்த 2017 ஆம் வருடம் பி டெக் பட்டம் பெற்றவர் ஆவார். இவருடைய வயது 25 வருடம், 11 மாதங்கள் ஆகிறது. தற்போதைய மக்களவையில் இவர் மிகவும் இளைய உறுப்பினர் ஆவார். ஒரிசா மாநிலம் கியோஞ்சர் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்தவர் இவருடைய தாய்வழி பாட்டனார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அரசியல் சாராத குடும்பமாக இருந்த சந்திராணி முர்மு தற்போது மக்களவை உறுப்பினர் ஆகி உள்ளார். பிஜு ஜனதா தளம் கட்சி வேட்பாளர் தேர்வில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீட்டை வழங்கி உள்ளது. அவ்வகையில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்தின் போது இவரைப் பற்றி போட்டோ ஷாப் மூலம் தவறான படங்கள் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கு இவர் அஞ்சாமல் தனது பிரசாரத்தை தொடர்ந்து தற்போது தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இவர் செய்தியாளர்களிடம், “எனது மாவட்டத்துக்கு உள்ள வறுமையில் வாடும் மக்கள் உள்ள வளமான பூமி என்னும் பெயரை நான் அறிவேன். அதை நீக்க நான் பாடு படுவேன்.
எனது பெயரை வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு சில தினங்கள் முன்பு கூட நான் எனது தொகுதியை முழுமையாக சுற்றி பார்த்தில்லை. உண்மையை சொன்னால் ஒரு மக்கள் பிரதிநிதியாக எனக்கு முன் உள்ள பிரச்னைகள் குறித்தும் அப்போது எனக்கு தெரியாது. தற்போது நான் சிறிது சிறிதாக அது குறித்து அறிந்துக் கொண்டு வருகிறேன். பதவி ஏற்ற பிறகு தொகுதியில் முழுவதுமாக பயணம் செய்து குறைகளை அறிந்து அதை நீக்க நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்துள்ளார்.