டில்லி:
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், டில்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தோல்வி குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
நாடு முழுவதும் நடைபெற்ற17வது மக்களவைக்கான தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 52 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரசுக்கு பெரும் வெற்றியை தேடித்தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கும் இடங்கள் கிடைக்காத நிலையில், காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியால் வெற்றிபெறெ முடியவில்லை. அதுபோல மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உ.பி. மாநிலத்தின் பாரம்பரியமிக்க அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோல்வி அடைந்ததும் பரபரப்பாக பேசப்படுகிறது. காங்கிரஸ் வெற்றிக்காக பிரியங்கா காந்தி உ.பி.யில் அதிரடி பிரசாரம் செய்த நிலையில், 80 தொகுதிகளை கொண்ட உ.பி.யில் சோனியா காந்தி மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.
இந்த பரபரப்பான சூழலில் காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
காங்கிரஸ் தோல்வி காரணமாக ஏற்கனவே பல மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ள நிலையில், ராகுல்காந்தியும் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
தேர்தல் முடிவுக்கு கருத்து தெரிவித்த ராகுல், பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் படுதோல்விக்கு தானே பொறுப்பு என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.