ஆலத்தூர்
கேரள மாநிலம் ஆலத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற ரம்யா அரிதாஸ் அம்மாநிலத்தின் இரண்டாவது தலித் பெண் மக்களவை உறுப்பினர் ஆவார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவடத்தில் உள்ள சிற்றுரை சேர்ந்தவர் ரம்யா அரிதாஸ். இவருடைய தந்தை ஒரு தினக்கூலி தொழிலாளி ஆவார். இவர் தாய் ஒரு தையல் கலைஞர். கடந்த 2011 ஆம் வருடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்திய திறமையாளர் நிகழ்வில் கலந்துக் கொண்டதில் இருந்து இவர் பெயர் ஓரளவு வெளியில் தெரிந்தது. அதன் பிறகு அவர் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸின் கூட்டணி சார்பில் ஆலத்தூர் தொகுதியில் ரம்யா அரிதாஸ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஆலத்தூர் தொகுதியின் மக்களவை உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருமான பிஜு போட்டியிட்டார். ரம்யா தனது தேர்தல் பிரசாரத்தின் போது தனது வறுமையான குடும்பத்தை பற்றி கூறி வறுமையில் வாடும் மக்களுக்கு உதவுவேன் என உறுதி அளித்தார்.
அதிகம் அறியப்படாதவராக இருந்தாலும் ரம்யாவின் உரை மக்களை மிகவும் கவர்ந்தது. அதன் விளைவு நேற்றைய வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றியாக ரம்யாவின் கைகளை அடைந்தது. ரம்யா அரிதாஸ் 5.33,815 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட பிஜு 3,74,847 வாக்குகள் பெற்றார். ரம்யா 1,58,968 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது வெற்றியை ஆலத்தூர் மக்களுக்கு காணிக்கை ஆக்குவதாக ரம்யா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தின் இரண்டாவது தலித் பெண் மக்களவை உறுப்பினர் என்னும் பெருமையை ரம்யா அரிதாஸ் இந்த வெற்றியின் மூலம் அடைந்துள்ளார். ஏற்கனவே கடந்த 1971 ஆம் வருடம் அடூர் தொகுதியில் வென்ற பார்கவி தங்கப்பன் (சிபிஐ) மாநிலத்தின் முதல் தலித் பெண் மக்களவை உறுப்பினர் ஆவார்.