ஸ்ரீநகர்
காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அம்மாநிலத்தில் விரைவில் குடியரசு தலைவர் ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. கடந்த 2018 ஆம் வருடம் ஜூன் மாதம் 18 ஆம் தேதி அன்று பாஜக தனது ஆதரவை திரும்ப பெற்றதால் அந்த அரசு கவிழ்ந்தது. புதிய அரசு அமைய வசதியாக சட்டப்பேரவை கலைக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு 2018 ஆம் வருடம் நவம்பர் மாதம் 21 ஆம் தேதி அன்று முன்னாள் முதல்வரும் பிடிபி கட்சி தலைவியுமான மெகபூபா முஃப்தி தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்,
உடனடியாக மக்கள் மாநாட்டுக் கட்சி தலைவர் சாஜத் லோன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவர் கட்சியில் இரு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். இதை ஒட்டி அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் குதிரைப்பேரம் நடப்பதை தடுக்க சட்டப்பேரவையை கலைத்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறு மாதங்களுக்கு குடியரசு தலைவர் அட்சியின் கீழ் மாநிலம் வந்தது. ஆனால் ஆறு மாதம் ஆகியும் தேர்தல் நடைபெறாததால் ஜனாதிபதி ஆட்சி 2019 ஆம் வருடம் ஜூன் 19 வரை நீட்டிக்கபட்டுள்ளது. இன்று காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் ஒரு மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் சத்யபால் மாலிக், “காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் முடித்துக் கொள்ளப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்துக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்னும் இறுதி கோரிக்கையை நாங்கள் அனுப்ப உள்ளோம். எனது அலுவலக அதிகாரிகள் தங்கள் பொறுப்புக்களை தேர்தலில் வெற்றி பெறும் அரசுக்கு அளிக்க தயாராக உள்ளனர்” என சொல்லி உள்ளார்.