ஆல்வார்
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த கூட்டு பலாத்கார குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரை சேர்ந்த ஒரு தலித் பெண் ஐந்து பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த பலாத்கார நிகழ்வை அவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ வெளியாகி வைரலானது. அந்தப் பெண் மற்றும் அவர் கணவர் ஆகியோர் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
மக்களவை தேர்தல் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பாஜக அரசியல் ஆக்கி உள்ளது. தற்போது ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருவதால் இந்நிகழ்வுக்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதமர் மோடி தெரிவித்தார். அது மட்டுமின்றி தலித் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி ராஜஸ்தான் அரசுக்கு அளித்துள்ள ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ஆல்வாரில் நடந்த கூட்டு பலாதகார செய்தி அறிந்து நான் அதிர்ந்தேன். உடனடியாக நான் ராஜ்ஸ்தான் முதல்வர் அசோக் கெகலாத் இடம் பேசி தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். என்னைப் பொறுத்தவரை இது அரசியல் விவகாரம் இல்லை.
அத்துடன் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். அப்போது நான் இந்த செயலுக்கு தக்க நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி அளித்துள்ளேன். இந்த குற்றத்தை செய்தவர்களுக்கு விரைவில் தக்க தண்டனை கிடைக்கும்” என கூறி உள்ளார்.