ஃபாரிதாபாத்:
அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடி ஒன்றில், வாக்களிக்க சென்ற பெண்ணிடம் சென்ற பாஜக பூத் ஏஜண்ட், தாமரைக்கு வாக்களிக்க வலியுறுத்தியது தொடர்பான வீடியோ வைரலானது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வாக்களித்த பெண், தான் தாமரைச் சின்னத்தை அழுத்தும் படி நிர்பந்திக்கப்பட்டேன் என்று கூறினார். இதையடுத்து, அங்கு மே.19ந்தேதி மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதற்கு முக்கிய காரணமான செயல்பட்டவர் உட்பட அவருக்கு உதவி செய்த 3 அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 6வது கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது அரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைச் சின்னத்தை அழுத்துங்கள் என வாக்களிக்க வந்த 3 பெண் வாக்காளர்களை, அங்கிருந்த பாஜக பூத் ஏஜண்ட் நிர்பந்திததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. அதில், ஃபரிதாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில், நீல நிற சட்டை அணிந்த நபர் ஒருவர் மேஜையில் அமர்ந்திருக்கிறார். பெண் வாக்காளர்கள் வரிசையில் அறைக்குள் நிற்கின்றனர். ஒரு பெண் வாக்களிக்க செல்லும் போது, இந்த நபர் சுற்றும்முற்றும் பார்த்த நிலையில், வாக்களிக்க உள்ள பெண் அருகே சென்று தனது முகம் தெரியாத வகையில் குனிந்துகொண்டு கூறுகிறார்.. அவரை தேர்தல் அதிகாரிகள் தடுக்க முயற்சி செய்யவில்லை. அவரது அருகில் சென்று இந்த பொத்தானை அழுத்துங்கள் என கூறிவிட்டு வருகிறார். இதேபோன்று மேலும், 2 பெண்களிடம் அவர் கூறும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரியானா தேர்தல் ஆணையத் திற்கும் கவனத்திற்கும் சென்றது. இதைத்தொடர்ந்தே, பூத் ஏஜெண்ட் கிரிராஜ்சிங் என்பவர் கைது செய்யப்பட்டு உடனே ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் மே.19ஆம் தேதி மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பூத் ஏஜெண்ட் கிரிராஜ் சிங், அங்கு 28 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அங்கு 2 வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது. இங்குள்ள மக்கள் பெரும் பாலானோர் படிக்காதவர்கள், அவர்களுக்கு உதவி செய்யவே அருகில் சென்றேன், வாக்கு எந்திரம் அருகில் சென்றால் தேர்தல் வீதி மீறல் என்பது எனக்கு தெரியாது. நான் அவர்களுக்கு உதவி மட்டுமே செய்தேன் என்று கூறியுள்ளார்.
ஆனால், தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாக வாக்களித்த பண் கூறி உள்ளார். பூத் ஏஜன்ட் தன்னிடம் வந்து, தாமரைச் சின்னத்தை அழுத்தும் படி நிர்பந்தித்துள்ளார் எனினும், அந்த பெண் அது எனது விருப்பம் நான் எதற்கு வேண்டுமானாலும், வாக்களிப்பேன் என்று தெரிவித்துவிட்டதாக கூறி உள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.