மும்பை
தாம் நாட்டை விட்டு வெளியேற உள்ளதாக வந்த செய்தி தவறானது என நடிகை ஷபானா ஆஸ்மி தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மியின் கணவர் பிரபல கவிஞர் ஜாவேத் அக்தர் ஆவார். இவர்கள் இருவரும் சமூகத்தில் நடைபெறும் தவறான நிகழ்வுகளையும் அரசியல்வாதிகளின் தவறுகளையும் நேரடியாக கண்டிப்பது வழக்கமாகும். மத்திய அரசு குறித்த இவர்கள் விமர்சனங்கள் பலமுறை பாஜகவினர் இடையே அதிருப்தியை உண்டாக்கி இருக்கின்றன.
தற்போது மக்களவை தேர்தல் மும்முரமாக நடைபெறும் வேளையில் ஷபானா ஆஸ்மி மீண்டும் மோடி பிரதமரானால் தாம் தமது கணவருடன் இந்தியாவை விட்டு வெளியேறா உள்ளதாக கூறியதாக தகவல்கள் பரவின. இந்த செய்தியை பலரும் சமூக வலை தளங்களில் பரப்பினார்கள். இது குறித்து சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில் ஷபானா ஆஸ்மி தனது டிவிட்டரில், “இந்தியாவை விட்டு வெளியேற உள்ளதாக நான் எப்போதும் சொல்லவில்லை. இது பொய்ச் செய்தி ஆகும். நான் இந்தியாவில் பிறந்தவள். எனது மரணமும் இந்தியாவில் தான் நிகழும்.
இந்த தவறான செய்திகளுக்கு கண்டனம் தெரிவிப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாதது வேதனை அளிக்கிறது. இவை தோல்வி பயம் கொண்டோர் பரப்பும் பொய்ச் செய்திகள்” என பதிந்துள்ளார்.