லக்னோ:

பாஜகவின் தேசியவாதம் என்பது மோடியில் தொடங்கி, மோடியில் முடிகிறது என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அரசியல் சாசனமும், அமைப்புகளும் தாக்குதலுக்கு ஆளாகும் போது கோழையாக வீட்டில் எப்படி உட்கார்ந்திருக்க முடியும். அதனால் தான் அரசியலுக்கு வந்தேன்.

உத்தரப்பிரதேசத்தில் அதிக பணியும், பொறுப்பும் இருந்ததால், எனது பெரும்பாலான பிரச்சாரம் இங்கேயே முடிந்துவிட்டது.

ஏற்கெனவே, காங்கிரஸ் தலைவராகுமாறும், பொதுச்செயலாளர் ஆகுமாறும் ராகுல்காந்தி விடுத்த வேண்டுகோளை நான் ஏற்கவில்லை.

எதற்கும் அனுபவம் தேவை. மக்களிடமிருந்து அனுபவத்தை பெற்ற பிறகு, கட்சித் தலைமை கூறியபடி, பதவியை ஏற்க சம்மதித்தேன்.
உத்தரப்பிரதேசத்தில் பல தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

அடுத்த முறை முதல்வராவீர்களா என்ற கேள்வி தேவையற்றது. நான் கட்சியின் பொதுச் செயலாளர். கட்சியை வலுப்படுத்தவே நான் சேர்ந்துள்ளேன்.

இந்நிலையில், அடுத்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவது குறித்து தற்போது எவ்வாறு கூற முடியும்.

காங்கிரஸ் போட்டியால் சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், பாஜகவுக்கு அது ஆதாயமாக அமையும் என்றும் கூறுவது தவறு.

நாங்கள் கடும் போட்டியை கொடுத்துள்ளோம். எங்கள் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவர்.
சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சியுடன் காங்கிரஸ் இணைந்து போட்டியிருந்தால், பாஜகவுக்கு 5-10 தொகுதிகள் பறிபோயிருக்கும் என்பது உண்மைதான்.

இதே நிலை மற்ற மாநிலங்களிலும் உள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கு ஏற்றவாறு கட்சி முடிவு எடுக்க வேண்டியுள்ளது.

தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, பீகார் மற்றும் ஜார்கண்டில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
இந்த மாநிலங்களில் எல்லாம் கட்சியை மேலிருந்து கீழ்மட்டம் வரை வலுப்படுத்த வேண்டும்.

கட்சிக்கு அனுதாபிகளாகவும், அர்ப்பணிப்பும் கொண்ட தொண்டர்களை பதவியில் அமர்த்த வேண்டும். இதுபோன்றவற்றை செய்தால் மட்டுமே சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட முடியும்.

குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் ஆட்டத்தின் போக்கையே மாற்றக் கூடியதாக இருக்கும்.
விவசாயிகள், ஏழைகள் மட்டுமன்றி வேலையில்லாமல் இளைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசின் திட்டங்கள் தேவைப்படுகிறது.

அந்த வகையில் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். வரி செலுத்தி வாடிக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த திட்டம் உதவியாக இருக்கும்.

நாங்கள் தேசியத்தை மட்டுமே பேசுகிறோம். ஆனால், பாஜகவின் தேசியத்தில் குறிப்பிடும்படி ஏதும் இல்லை.

மோடி பெயரை சொல்லி ஆரம்பித்து, மோடி பெயரில் முடிப்பது பாஜக தேசியவாதமாக உள்ளது.

மோடியின் படைகள் என்று ராணுவத்தையும் அவமதிக்கிறார்கள். பாஜகவினர் பாகிஸ்தானைப் பற்றியே பேசுகிறார்கள். காங்கிரஸார் இந்தியாவைப் பற்றியே பேசுகிறோம்.

என் கணவர் வதேரா மீதான விசாரணை பற்றி கவலை இல்லை. நான் இந்திரா காந்தியைப் போல் இருப்பதாக கூறுவது என்னை கவுரவப்படுத்துவதாக உள்ளது.

இதன்மூலம் எனக்கான பொறுப்புகளும் அதிகரிக்கின்றன என்றார்.