பெங்களூரு: இந்தியாவின் செயற்கைக்கோள் எதிர்ப்பு சோதனையால் வான்வெளியில் உருவான குப்பைகளில் பெரும்பாலானவை அழிந்துவிட்டதாகவும், மீதமிருக்கும் சில குப்பைகளும் விரைவில் அழிந்துவிடுமெனவும் டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு தொடர்பான ஆராய்ச்சி நிறுவனத்தில், தேசியப் பாதுகாப்பிற்கான தொழில்நுட்பம் என்ற தலைப்பில் நிகழ்த்திய சொற்பொழிவுக்குப் பின்னர் இவ்வாறு தெரிவித்தார் அவர்.
இந்தியாவின் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை திட்டத்தால், விண்வெளியில் குப்பைகள் அதிகரித்து, பல மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்று சர்வதேச அளவில் எச்சரிக்கைகளும் விமர்சனங்களும் எழுந்தன.
இந்த சூழலில்தான் சதீஷ் ரெட்டியின் இந்த பதில் முக்கியத்துவம் பெறுகிறது. எஞ்சியிருக்கும் குப்பைகளும் சில வாரங்களில் அழிந்துவிடும் என்று அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.