கொச்சி:

கேரளாவில் நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் மலையாளம் மொழியில் படித்த பீகாரைச் சேர்ந்த மாணவர் முகமது தில்ஷாத் ஏ+ கிரேடு பெற்று முதன்மையாக தேர்ச்சி பெற்றுள்ளார்.


கேரளாவைச் சேர்ந்தவர்கள் வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடிச் சென்றதால், கேரளாவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

இதனையடுத்து, கடந்த 1999-ம் ஆண்டு பீகாரிலிருந்து வேலை தேடி கேரளாவுக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கேரளாவுக்கு குடிபெயர்ந்தனர்.
அவ்வாறு குடிபெயர்ந்தவர்களில் ஒருவர் 41 வயதான சுட்டு ஷஜீத். இவருக்கு படிப்பறிவு கிடையாது. வறுமை காரணமாக அவரை பெற்றோர்கள் படிக்க வைக்கவில்லை.

எர்ணாகுளம் எடையாறு பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்த இவர், கடந்த 20 வருடங்களாக தன் மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

தான் படிக்காத குறையைப் போக்க தன் குழந்தைகளை படிக்க வைக்க முடிவு செய்தார் சுட்டு.
தன் மூத்த மகன் முகமது கல்வியில் அரசுப் பள்ளியில் படிக்க வைத்தார்.

அவரது மகனும் தந்தையின் கனவை வீணாக்கவில்லை.

பத்தாம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலம் ஏ+ கிரேடு பெற்று முதன்மை மாணவராக தேர்ச்சி பெற்றார்.

இதனையடுத்து, மாணவருக்கும், அவரது பெற்றோருக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசு உட்பட பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டு குவிந்து வருகிறது.

இந்த பள்ளியின் கணக்கு ஆசிரியர் மாலையில் அனைத்து மாணவர்களுக்கும் தனியாக ட்யூசன் நடத்தியிருக்கிறார்.

தில்ஷாத் படிப்பில் காட்டும் ஆர்வத்தை பார்த்து அவனுக்கும் மற்ற மாணவர்களுக்கும் படிப்பில் கவனம் செலுத்தினேன் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் கணக்காசிரியர் சுதி.

60 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய 12 மாணவர்களில் 4 பேர் வட மாநிலத்தவர்கள்.

இவர்கள் மலையாளம் மொழி வழியாகவே அனைத்துப் பாடங்களையும் படித்து வந்துள்ளனர்.
ஆங்கிலம் மற்றும் இந்தி படிக்கும் வாய்ப்பு இவர்களுக்கு இல்லை.

இதனை கருத்தில் கொண்டு பள்ளி தொடங்கும் முன்பு இந்த மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் வகையில் ரோஷினி என்ற திட்டத்தை எர்ணாகுளம் கலெக்டர் முகமது சஃருல்லா தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.