அலகாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கருப்புக் கொடி காட்டிய 15 வயது சிறுவன், பாரதீய ஜனதா கட்சியினரால் கடுமையாக தாக்கப்பட்டான்.
அலகாபாத் நகரில் விஜய் சங்கல்ப் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார் மோடி. அவரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பையும் மீறி, 15 வயதுடைய அங்கித் பிரதான் யாதவ் என்ற சிறுவன், கருப்புக் கொடியை கொண்டுவந்து விட்டான்.
அவன் கூட்டத்திலும் அமர்ந்தான். பிரதமர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களில், தனது நாற்காலியின் மீது ஏறி, வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிராக, கருப்புக் கொடியை காட்டியவாறே கோஷமிடத் தொடங்கிவிட்டான்.
உடனே, அவனை சூழ்ந்துகொண்ட பாரதீய ஜனதாவினர், அவனை கீழே இழுத்துப்போட்டு கடுமையாக தாக்கத் தொடங்கினர். பாதுகாப்புப் படையினர் ஓடிவந்து, அச்சிறுவனை மீட்டு வெளியே கொண்டு சென்றனர். அந்த நிலையிலும் அவன் எதிர் கோஷமிட்டபடியேதான் இருந்தான்.
“நான் எதிர்ப்பு தெரிவிக்க மட்டுமே வந்தேன். ஆனால், பாரதீய ஜனதாவினர் என்னை தாக்கிவிட்டனர்” என்று கூறியுள்ளான் அந்த சிறுவன்.