புதுடெல்லி: உலகளவில் உடல் பருமன் பிரச்சினை நகரங்களைவிட, கிராமப்புறங்களிலேயே அதிகம் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இந்த உடல் பருமன் அம்சம் பிஎம்ஐ என சுருக்கமாக குறிப்பிடப்படுகிறது. பிஎம்ஐ எனப்படுவது உயரத்தையும், உடல் பருமனையும் அளவிடுவதன் மூலம் மதிப்பிடப்படுகிறது.
கடந்த 1985 முதல் 2017ம் ஆண்டு வரை, உலகின் 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், 112 மில்லியன் வயதுவந்தோரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதாவது, ஒரு தனிநபரின் உயரத்திற்கேற்ற உடல் எடை இருக்கிறதா? என்பதாக ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின்படி, நகர்ப்புறங்களைவிட, கிராமப்புறங்களில்தான் உடல் பருமன் பிரச்சினை அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள நாடுகளில் உள்ள கிராமப்புறங்களில் இந்தப் பிரச்சினை 80% அதிகரித்துள்ளதாம்.
கிராமப்புறங்களில் பிஎம்ஐ, ஆண் மற்றும் பெண்ணுக்கு 2.1 kg/m2 அதிகரித்துள்ள நிலையில், நகர்ப்புறங்களில் பெண்களுக்கு 1.3 kg/m2 மற்றும் ஆண்களுக்கு 1.6 kg/m2 பிஎம்ஐ அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.