டில்லி:

டில்லி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரரான பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீர்  எந்த பெண்ணையும் தவறாக பேச மாட்டார் என்று ஹர்பஜன்சிங் டிவிட் போட்டுள்ளார்.

டில்லி தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, தன்னை எதிர்த்து போட்டியிடும் ஆம்ஆத்மி பெண் வேட்பாளர் குறித்து தரக் குறைவாக விமர்சித்து துண்டு பிரசுரங்களை விநியோகித்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து புகார் அளித்துள்ள ஆம்ஆத்மி வேட்வாளர் அதிஷி, தன்னை   மாட்டு இறைச்சி உண்பவள், பாலியல் தொழிலாளி என்று கவுதம் கம்பீர் களங்கம் ஏற்படுத்தி உள்ளார் என்று குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கம்பீருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் சிங்,  கவுதம் கம்பிர் சம்பந்தப்பட்ட நேற்றைய நிகழ்வுகள் குறித்து நான் அதிர்ச்சியடைந்துள்ளேன், அவர் எந்தவொரு பெண்ணையும் தவறாக பேச மாட்டார்,  அவர் வெற்றி பெறுவாரா தோல்வி அடைவாரா என்பது வேறு விஷயம், ஆனால் இந்த விஷயம் அனைத்துக்கும் மேலாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.