பிந்த், மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசத்தில் தற்போது துப்பாக்கியைவிட கைப்பம்புக்கு மதிப்பு அதிகரித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் பிந்த் பகுதியில் ஒரு காலத்தில் கொள்ளைக்காரர்கள் அதிகம் இருந்தனர்.  கொள்ளையர்கள் துப்பாக்கிகளுடன்  வந்து ஊரையே சுட்டுப் பொசுக்கி விட்டு கொள்ளை அடிக்கும் நிகழ்வுகள் அங்கு சாதாரணமானவை ஆகும்.. இதனால் கொள்ளையர்களுக்கு எதிராக போரிட அங்குள்ள மக்களுக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள தடையின்றி உரிமம் வழங்கப்பட்டது.

அந்தப் பகுதிகளில் துப்பாக்கி விற்கும் கடைகளும் அதிகரித்தன. அதிலும் அந்த பகுதியில் இரட்டைக் குழல் துப்பாக்கி அதிக அளவில் விற்கப்பட்டது. குறிப்பாக மேல் சாதியினரான தாகுர்கள், மற்றும் செல்வந்தர்கள் வீட்டில் துப்பாக்கி வைத்திருப்பது ஒரு மதிப்புக்குரிய செயலாக ஆனது. பிந்த் பகுதியில் இவ்வாறு 22,752 துப்பாக்கி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் தற்போது நிலைமை அடியோடு மாறி விட்டது. இது குறித்து பிந்த் மாவட்ட ஆட்சியர் விஜயகுமார், “தற்போது மக்கள் துப்பாக்கி வைத்திருப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதில் ஒரு கைப்பம்பு அமைத்து வீட்டின் முன் வைப்பதே தற்போது கவுரவத்துக்குரிய பொருளாக மக்கள் கருத தொடங்கி விட்டனர். இதுவரை இம்மாவட்டத்தில் 20,170 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இது மேலும் அதிகரித்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினரான அரவிந்த் படோரியா, “மூன்றில் ஒரு இல்லத்துக்கு கைப்பம்பு அவசியத் தேவை ஆகி உள்ளது. ஒரு கைப்பம்பின் விலை ரூ. 1 லட்சம் ஆகிறது. நான் எனது சட்டப்பேரவை தொகுதி நல நிதியில் இருந்து கைப்பம்புகள் அமைக்க ரூ.1 கோடி நிதி உதவி அளித்துளேன்.” என தெரிவித்துள்ளார்.