டில்லி
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மிகவும் மட்டமாக நடந்துக் கொள்வதாக கவுதம் கம்பீர் கூறி உள்ளார்.
நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் கிழக்கு டில்லி தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவால் நிறுத்தப்பட்டுள்ளார். தற்போது 37 வயதாகும் இந்த இளைஞர் கடந்த மார்ச் மாதம் பாஜகவில் இணைந்தார். இவரை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக முன்னாள் மாணவி அதிஷி, மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் அரவிந்தர் சிங் லவ்லி ஆகியோர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
இம்மூவரில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஒரு அனுபவம் மிக்க அரசியல்வாதி ஆவார். இவர் டில்லி அமைச்சரவையில் அமைச்சராக பணி புரிந்தவர். கவுதம் கம்பீரைப் போலவே அதிஷியும் தற்போது முதல் தேர்தலை சந்திக்கிறார். கடந்த டில்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதில் அதிஷி பெரும் பங்காற்றினார். இவர் டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் உதவியாளராக பணியாற்றியவர் ஆவார்.
நேற்று முன் தினம் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் அதிஷி டில்லியின் விவேக் விகார், கிருஷ்ணா நகர் போன்ற பகுதிகளில் செய்தித்தாள்களுடன் ஒரு பிட் நோட்டிசை அளிக்க கவுதம் கம்பீர் ஏற்பாடுகள் செய்துள்ளதாக தெரிவித்தார். அதில் தம்மைப் பற்றியும் மனீஷ் சிசோடியா குறித்தும் தவறாக எழுதப்பட்டிருப்பதாக தெரிவித்து செய்தியாளர்கள் முன்னிலையில் அதிஷி கண்ணீர் விட்டு அழுதார்.
[youtube https://www.youtube.com/watch?v=6ljiNZb3G54]
இதற்கு கவுதம் கம்பீர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஒரு பேட்டியில் அவர், “நடந்த நிகழ்வுகளுக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். நான் பெண்களை மதிக்க வேண்டும் என எனக்கு சொல்லிக் கொடுத்த குடும்பத்தில் இருந்து வந்தவன். என் மீது இப்படி ஒரு கேவலமான பழியை போடும் அளவுக்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இவ்வளவு மட்டமாக நடந்துக் கொள்வார் என நான் எண்ணவில்லை.
என் மீதான இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நான் இந்த தேர்தலில் இருந்து விலக தயாராக உள்ளேன். என் மீது தவறாக பழி சுமத்திய அரவிந்த் கெஜ்ரிவால், மனீஷ் சிசோடியா மற்றும் அதிஷி மீது விரைவில் நான் மான நஷ்ட வழக்கு தொடுக்கப் போகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
கவுதம் கம்பீர் தம் மீது தவறான பழி சுமத்தியதற்காக அரவிந்த் கெஜ்ரிவால், மனீஷ் சிசோடியா மற்றும் அதிஷி ஆகியோர் மன்னிப்பு கோர வேண்டும் என நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.
இது குறித்து கவுதம் கம்பீர் தனது டிவிட்டரில், “அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களே, ஒரு பெண்மணியின் அதுவும் உங்கள் கட்சியின் பெண்மணியின் நடத்தையை நீங்களே தவறாக சித்தறிப்பதை கண்டிக்கிறேன். தேர்தலில் வெற்றி பெற எதுவும் செய்வீர்களா? நீங்கள் முதல்வராக இருக்க லாயக்கற்றவர். உங்கள் சின்னமான துடைப்பத்தைக் கொண்டு உங்கள் அறிவில் உள்ள குப்பைகளை யாராவது சுத்தம் செய்ய வேண்டும்” என பதிந்துள்ளார்.
இது குறித்து கிழக்கு டில்லி தொகுதியின் தேர்தல் அதிகாரி மகேஷ் இந்த விவகாரத்தில் புகார் இல்லாமலே வழக்கு பதிந்து உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மாநில தேர்தல் ஆணையம் காவல்துறையிடம் இது குறித்து எடுக்கபட்ட நடவடிக்கைகள் குறித்து உடனடியாக விவரம் அளிக்குமாறு டில்லி நகர மகளிர் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.