சுல்தான்பூர்: பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான மேனகா காந்தி போட்டியிடும் உத்திரப்பிரதேச மாநில சுல்தான்பூர் தொகுதியில், பிரியங்கா காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியில், மேனகா காந்தியே சிக்கிக்கொண்டார்.
கடந்தமுறை பிலிபிட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மேனகா காந்தி, இந்தமுறை சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்தமுறை சுல்தான்பூரில் வென்ற அவரின் மகன் வருண் காந்தி, இந்தமுறை பிலிபிட் தொகுதியில் நிற்கிறார்.
இந்நிலையில், சுல்தான்பூரில் மேனகா காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், பிரியங்கா காந்தியும், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அத்தொகுதியில் பிரச்சாரம் செய்யவே, போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெருக்கடியில் மேனகா காந்தியும் மாட்டிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியங்காவின் சித்தப்பா மறைந்த சஞ்சய் காந்தியின் மனைவிதான் மேனகா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.