புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட மொத்தம் 128 அதிகாரப்பூர்வமற்ற பயணங்களுக்காக, இந்திய விமானப்படைக்கு ரூ.89 லட்சத்தை பிரதமர் அலுவலகம் வழங்கியுள்ளது.
இந்த தொகை, வணிகரீதியிலான விமானப் பயண கட்டணங்களுடன் ஒப்பிடும்போது, மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.
ஏனெனில், கடைசியாக கடந்த 1999ம் ஆண்டுதான், இத்தகைய அதிகாரப்பூர்வமற்ற பயணங்களுக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற அதிகாரப்பூர்வமற்ற பயணங்களுக்கான தொகையை பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள், அரசுக்கு செலுத்திவிட வேண்டுமென்பது விதிமுறையாகும்.
பொதுவாக, வழக்கமான தனது பயண வகைப்பாட்டை மீறி, தொலைதூரப் பகுதிகளுக்கு பிரதமர் செல்லும்போது, இதுபோன்ற விமான சேவைகள், இந்திய விமானப் படையால் வழங்கப்படும்.
2014ம் ஆண்டு மே மாதம் தொடங்கி, 2017ம் ஆண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், பிரதமர் மேற்கொண்ட அதிகாரப்பூர்வமற்ற பயணங்களின் விபரங்களை இந்தியா விமானப்படை வழங்கியுள்ளது.