மும்பை: கடந்த 2013ம் ஆண்டிலிருந்து கோமா நிலையிலிருக்கும் கணவரின் சொத்துக்களுக்கு பாதுகாவலராகவும் மேலாளராகவும், அவரின் மனைவியை நியமித்து உத்தரவிட்டுள்ளது மும்பை உயர்நீதிமன்றம்.

தனது கணவரின் மருத்துவ செலவுகளை கவனிக்கவும், கல்லூரிக்கு செல்லும் 2 பிள்ளைகளின் செலவுகளை மேற்கொள்ளவும், கணவருடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களுக்கு, தன்னைப் பாதுகாவலராக நியமிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார் அந்தப் பெண்.

இதனையடுத்து, கோமாவில் இருக்கும் அந்த மருத்துவரின் உடல்நிலையைப் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது நீதிமன்றம்.

பரிசோதனை அறிக்கையில், அந்த நபர் இன்னொருவரின் உதவியின்றி இயங்க முடியாது என்றும், அவரால் சுய உணர்வுடன் எந்த முடிவையும் மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்தான், அந்தப் பெண்ணின் வேண்டுகோளை ஏற்று, இந்த உத்தரவை வழங்கியுள்ளது மும்பை உயர்நீதிமன்றம்.