டில்லி:

ச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 4 நீதிபதிகள் பணியிடத்துக்கு நியமிக்கப்பட வேண்டிய புதிய  நீதிபதிகளை கொலிஜியம் மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதில் ஏற்கனவே 2 நீதிபதிகள் பெயரை மத்தியஅரசு நிராகரித்த நிலையில், கொலிஜியம் அவர்களை  மீண்டும் பரிந்துரை செய்துள்ளது.

31நீதிபதிகள் கொண்ட இந்திய உச்சநீதி மன்றத்தில் தற்போது 27 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் காலியாக உள்ள 4 பணியிடங்களுக்கு புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கொலிஜியம் கூடி ஆலோசனை நடத்தியது.

தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் அமைப்பில் நீதிபதிகள் பாப்டே, என்.வி.ரமணா, அருஷ்மிஷ், ஆர்எப்.நரிமான் ஆகியோர் இடம்  பெற்றுள்ளனர். இந்த கொலிஜியம் அமைப்பு ஏற்கனவே அனுப்பிய பரிந்துரையில்,  போதிய சீனியாரிட்டி இல்லை என்று கூறி மத்திய அரசு  திருப்பிய அனுப்பிய  நீதிபதிகளான  நீதிபதிகள் அனிருத்தா போஸ், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கும்படி, மத்திய அரசுக்கு கொலிஜியம் மீண்டும் பரிந்துரை செய்துள்ளது.

அத்துடன்   நீதிபதிகள் பி.ஆர்.கவாய் (பூஷண் ராமகிருஷ்ண கவாய்), சூரியகாந்த் ஆகியோரையும்,  உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி பரிந்துரைத்துள்ளது.

இவர்களில்  நீதிபதி கவாய், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகயும், நீதிபதி சூரிய காந்த் இமாச்சல பிரதேச தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி வருகின்றனர். அதுபோல, நீதிபதி அனிருத்தா போஸ் தற்போது ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், போபண்ணா கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி வருகின்றனர்.

திறமை மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் இந்த பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக கொலிஜியம் கூறியிருக்கிறது.

ஏற்கனவே, பரிந்துரைத்த இந்த நீதிபதிகளை மீண்டும் பரிந்துரை செய்திருப்பதால் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.