மும்பை
இந்தியாவில் தனது முதல் விற்பனையகத்தை மும்பையில் ஆப்பிள் நிறுவனம் தொடங்க உள்ளது.
தற்போதைய நிலையில் ஆப்பிள் ஐ போன்கள் உலகெங்கும் கடும் வரவேற்பை பெற்றிருந்த நிலை மாறி உள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளின் மலிவு விலை ஸ்மார்ட் போன்கள் அறிமுகத்தால் ஆப்பிள் மொபைல்கள் விற்பனையில் கடும் சரிவு உண்டாகி இருக்கிறது. எனவே மீண்டும் முதலிடத்தை பிடிக்க ஆப்பிள் நிறுவனம் முயன்று வருகிறது.
ஆப்பிள் மொபைல்களை பொறுத்த வரையில் அதன் விற்பனை அமெரிக்காவில் 47% மற்றும் சீனாவில் 18% ஆக உள்ளது. இப்போது இந்தியாவில் மொபைல்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது. ஆகவே தனது நேரடி வர்த்தகத்தை இந்தியாவில் நடத்த ஆப்பிள் முடிவு செய்துள்ளது.
எனவே டீலர்கள் மூலமாக மொபைல்கள் விற்பனை செய்து வந்த ஆப்பிள் நிறுவனம் தனது நேரடி விற்பனையகத்தை திறக்க உள்ளது. விரைவில் மும்பை நகரில் தனது முதல் விற்பனையகமாக தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. விரைவில் ஒவ்வொரு நகரிலும் விற்பனையகங்கள் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது.