டில்லி
சிபிஎஸ்இ நடத்திய 12 ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் தந்ததால் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
சி பி எஸ் இ உள்ளிட்ட பல கல்வி வாரியங்கள் பள்ளி இறுதி தேர்வுகளை நடத்தி வருகின்றன. இவ்வாறு தேர்வுகள் நடக்கும் போது மாணவர்கள் தேர்ச்சியை அதிகரிக்க மாணவர்களுக்கு இந்த வாரியங்கள் அதிக மதிப்பெண்கள் அளிப்பதாக பல முறை புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக சிபிஎஸ்இ முறையில் இது அதிகம் நடைபெறுவதாக கூறப்பட்டது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி இது குறித்து மனித வளத்துறை அமைச்சர் பிரகஷ் ஜவடேகர் சி பி எஸ் இ உள்ளிட்ட 32 பள்ளிக் கல்வி வாரியங்கள் இது போல அதிக மதிப்பெணகள் அளிக்காது என உறுதி அளித்தார். மேலும் அவர் இது மற்ற மாணவர்களுக்கு ஒரு தவறான அச்சுறுத்தலாக அமையும் எனவும் தெரிவித்தார்.
சமீபத்தில் சி பி எஸ் இ யின் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த தேர்விலும் மாணவர்கள் தேர்ச்சியை அதிகரிக்க மதிப்பெண்கள் கூட்டப்பட்டிருப்பதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மற்ற கல்வி வாரிய மாணவர்கள் மட்டுமின்றி சி பி எஸ் இ வாரிய மாணவர்களும் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக தெரிவிக்கின்றனர்.
இதை ஒட்டி ஒரு ஆங்கில ஊடகம் 12 ஆம் வகுப்புக்கான தேர்ச்சி விவரங்களை பரிசீலித்துள்ளது. அதில் பெரும்பாலானோர் 95% அளவில் தேர்ச்சி பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. அதைப் போலவே 35% மற்றும் 45% மதிப்பெண்களிலும் பலர் தேர்ச்சி பெற்றுளனர். குறிப்பாக இந்த தேர்வு முடிவில் 15 முதல் 34 வரை எந்த மாணவரும் மதிப்பெண்கள் பெறவில்லை.
தேர்ச்சி பட்டியலில் 95% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் 13% உள்ளனர். இது குறித்து பேராசிரியர் தீரஜ் சங்கி, “இந்த மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளது தெளிவாக தெரிகின்றது. அதாவது 91 முதல் 95 வரை மதிப்பெண்கள் பெற்ற பல மாணவர்களின் மதிப்பெண்கள் 95 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதனால் 95 மதிப்பெண் பெற்ற மாணவரும் 91 முதல் 94 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் வரையிலும் ஒரே நிலைக்கு வந்து விடுவார்கள் என்பது நியாயமற்றது” என தெரிவித்துள்ளார்.
இது மாணவர்களிடையே கடும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு சில பாடங்களில் 80க்கு மேல் மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் 95 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன என கூறப்படுகிறது. இதனால் 80 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு மேற்படிப்பில் சேர நல்ல வாய்ப்பு உள்ள போதிலும் உண்மையாகவே 95 மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு போட்டி அதிகரிக்கிறது.