மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியம், முதன்முறையாக, தனது வருடாந்திர கான்கிளேவ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்நாட்டு மகளிர் கிரிக்கெட் அணிகளின் கேப்டன்களையும், அவற்றின் பெண் பயிற்சியாளர்களையும் அழைத்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு அணிகளின் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்துகொள்ளும் இந்த கான்கிளேவ் நிகழ்வில், இதுவரை மகளிர் கிரிக்கெட் அணிகளுடைய கேப்டன்களோ அல்லது பயிற்சியாளர்களோ அழைக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு உள்நாட்டு சீஸன் முடிவிலும், இந்த கான்கிளேவ் நடத்தப்பட்டு, கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்களின் கருத்துகள் கேட்கப்படும்.
எனவே, இந்தமுறை ஒரு புதிய விஷயமாக மகளிர் அணிகளின் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்களும் அழைக்கப்பட்டு, தமது சக துறை ஆண்களுடன் சேர்ந்து, தங்களுடைய ஆலோசனைகளையும் கூறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மே மாதம் 17ம் தேதி, இந்த ஆண்டிற்கான வருடாந்திர கான்கிளேவ் மும்பையில் நடைபெறவுள்ளது. ஜுலான் கோஸ்வாமி, மிதாலி ராஜ் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்யு ஆகியோர் குறிப்பிடத்தக்க மகளிர் கேப்டன்கள் ஆவர்.