பெங்களூரு
ராஜீவ் காந்தி குறித்த பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு கர்நாடகா மாநில பாஜக தலைவர்களில் ஒருவரும் சாம்ராஜ்நகர் வேட்பாளருமான ஸ்ரீநிவாச பிரசாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் நடந்த ஒரு தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி, “என் மீது ஏராளமான குற்றம் சுமத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை குற்றமற்றவனாக காட்டிக் கொள்ள முயல்கிறார். முன்பு உங்கள் தந்தையான மறைந்த காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தியை காங்கிரஸார் குற்றமற்றவர் என கூறினார்கள். ஆனால் அவர் ஒன்றாம் நம்பர் ஊழல் பேர்வழியாக இறந்தார்” என தெரிவித்தார்.
இது காங்கிரஸாரிடையே மட்டுமின்றி எதிர்க்கட்சியின்ரிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி டில்லி சாந்தினி சவுக் பகுதியில் நடந்த ஒரு கூட்டத்தில் தமது தந்தையை கேவலமாக பேசிய போதிலும் பிரதமர் என்னும் முறையில் அவரை தாம் வெறுக்கவில்லை” என பெருந்தன்மையாக தெரிவித்துள்ளார். மேலும் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல தலைவர்கள் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான ஸ்ரீநிவாச பிரசாத் சாம்ராஜ் நகர் வேட்பாளர் ஆவார். இவர், “ராஜிவ் காந்தி மீது போபர்ஸ் ஊழல் வழக்கு இருந்ததால் மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆனால் போபர்ஸ் வழக்கில் அவர் குற்றம் சாட்டப்படவில்லை. அதனால் அவர் கொலை செய்யப்படவும் இல்லை. அவரை கொலை செய்தது விடுதலைப் புலிகளின் சதி திட்டமாகும்.
வாஜ்பாய் தனது ஆட்சி காலத்தில் ராஜிவ் காந்தி செய்த பல நன்மைகளை புகழ்ந்துள்ளார். நானும் சிறுவயதில் இருந்தே ராஜிவ் காந்தியின் பல நற்செயல்களை கண்டு வந்துள்ளேன். எனக்கு மோடி மீது வாஜ்பாய் மீது உள்ள அளவுக்கு மரியாதை உண்டு. மோடியின் ராஜிவ் காந்தி குறித்த இந்த விமர்சனம் தேவை அற்றது” என தெரிவித்துள்ளார்.