புதுடெல்லி: கிராமப்புற ஏழைப் பெண்கள் அனைவரையும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மூலம் சமைக்க வைக்க வேண்டுமென்ற மோடி அரசின் உஜ்வாலா திட்டம், பெரும் தோல்வியில் முடிந்துள்ளது என்பதை கள ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன.

இந்த திட்டத்தில் முதன்முதலாக இணைக்கப்பட்ட பயனாளர்களுள் ஒருவரான குத்தி தேவி என்பவரின் கதையே அதைத்தான் சொல்கிறது. அவர், உஜ்வாலா திட்டத்தின் போஸ்டரிலேயே இடம்பெற்றவர். ஆனால், அவரே தற்போது தினமும் சாண வறட்டி மூலமாகத்தான் சமையல் செய்கிறார்.

இத்திட்ட பயனாளர்கள் ஆண்டிற்கு 12 சிலிண்டர்கள் வரை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், குத்தி தேவியால் 3 ஆண்டுகளுக்கும் சேர்த்து 11 சிலிண்டர்கள்தான் வாங்க முடிந்துள்ளது. காரணம், எரிவாயு சிலிண்டர்களின் விலையேற்றம்!

இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டோரில் வெறும் 30%பயனாளிகள் மட்டுமே, சமையல் எரிவாயு சிலிண்டரை மீண்டும் நிரப்புவதற்கு வருகிறார்கள் என்று தொடர்புடைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாண வறட்டி என்பது அதிக புகையை வெளியிடுகிறது என்பதோடு, அதிலிருந்து ஒருவித நச்சுப் பொருளும் வெளியாவதாக கூறப்படுகிறது.

ஆனால், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, மோடியின் ஆட்சியில் தொடர்ந்து ஏறி வருவதால், அவரின் அரசு கொண்டுவந்த திட்டமே தோல்வியில் முடிந்துள்ளது.