சென்னை:

பிளஸ்-2 விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தோர், இன்றுமுதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசின் தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த மாதம் (ஏப்ரல்) 19ந்தேதி வெளியானது.‘ 7082 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதியில்  91.3 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர்.

இவர்களில் பலரின் மதிப்பெண் குறித்த சந்தேகம், மற்றும்  தேர்வில் தோல்வி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விண்ணப்பம் செய்தவர்கள், இன்று முதல் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக  தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

பிளஸ் 1 அரியர் தேர்வு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் பங்கேற்று, தேர்வு முடிவுக்கு பின், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று முதல் விடைத்தாள் நகல் கிடைக்கும்.

தேர்வு துறையின், scan.tndge.in என்ற இணையதளத்தில், இன்று முதல், விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.

மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இரண்டு நகல்கள் எடுத்து, வரும், 10ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மறுகூட்டலுக்கு, உயிரியல் பாடத்துக்கு, 305 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு தலா, 205 ரூபாயும், மறுமதிப்பீடுக்கு, பாடம் ஒன்றுக்கு தலா, 505 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.