புதுடெல்லி: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் மோடி செய்திருந்த தரம் தாழ்ந்த விமர்சனத்திற்கு, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினரிடமிருந்து மட்டும் எதிர்ப்பு வரவில்லை. கல்வியாளர்களிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 200 ஆசிரியர்கள், தங்களின் கையொப்பமிட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அதில், ராஜீவ் காந்தி குறித்து நரேந்திர மோடி கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதை காங்கிரஸ் ஓவர்சீஸ் பிரிவைச் சேர்ந்த சாம் பிட்ரோடா டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
“நல்ல மற்றும் சிறந்த மனிதர்களின் அனைத்து செயல்களையும் வரலாறு பதிவு செய்கிறது. ஆனால், குறைந்தளவு மனிதர்களின் விமர்சனங்களுக்கு மட்டுமே கவனம் தருகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சாதனைகளை அனைவரும் அறிவார்கள். இந்த நாடு பலவகைகளிலும் அதை ஒப்புக்கொண்டுள்ளது” என்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.