புவனேஸ்வர்:

ங்கக்கடலில் உருவான ஃபானி புயல் நேற்று பகலில் ஒடிசாவை சூறையாடி விட்டு, இரவு மேற்கு வங்கத்தையும் பதம்பார்த்த நிலையில், பங்களாதேஷ் சென்று அமைதியடைந்துள்ளது.

இந்த நிலையில், ஒடிசாவை புரட்டிய புயல் அங்கு மகளிர் விடுதி ஒன்றில், கதவை மூட முயற்சித்த இளம்பெண்களை தூக்கி வீசும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது… புயலின் கோர முகத்தை இந்த வீடியோ மூலம் தெரிந்துகொள்ளலாம்.

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான   ஃபனி  புயல் அதிதீவிர புயலாக மாறி, நேற்று காலை முதல் ஒடிசா மாநிலத்தில் கரையைக் கடக்கத் தொடங்கி பகலில் கரையை கடந்தது. ஒடிசாவில் தனது கோர முகத்தை காட்டிய ஃபானி, சுமார் 175 கி.மீ வேகத்தில் சுழற்றிய  சூறாவளிக்கு ஏராளமான மரங்கள், செல்போன் கோபுரங்கள், மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன.

புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் உயிர்ச்சேதம் குறைந்தது. இருந்தாலும் 10க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்ததாகவும் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் புயலின் கோரத்தாண்டவத்தின் வீடியோக்கள் பல சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  ஒடிசாவில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில், இளம்பெண்கள் சிலர் சேர்ந்து, காற்றின் வேகத்தை தடுக்கும் வகையில், தங்கள் இருப்பிடத்தின் கதவை மூட முயல்கின்றனர். ஆனாலும் ஃபானி புயலின் தீவிரத்தன்மையை சமாளிக்க முடிய வில்லை.பலர் சேர்ந்து, கதவை மூடிவிட முயல்கையில், காற்றின் வேகத்தில், கதவு திறக்கப்பட்டு,  பெண்கள் அனைவரும்  நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். இந்த வீடியோ வைரலாகி பார்ப்போரை மிரட்டி வருகிறது..