திருவனந்தபுரம்

நேற்று முன் தினம் நடந்த வாக்குப் பதிவில் கேரள மாநிலத்தில் 77.68 சதவிகிதம் அதிலும் வயநாடு தொகுதியில் 80.31 % வரை வாக்குப் பதிவு நடந்துள்ளது.

நடைபெற்று வரும் மக்களவை தொகுதியில் கேரள மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் நேற்று முன் தினம் வாக்குப்பதிவு நடந்தது. இந்த முறை தேர்தலில் காங்கிரஸ் – பாஜக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என மும்முனை போட்டி உள்ளது. இம்முறை சபரிமலை விவகாரம் தேர்தலில் முக்கிய இடம் பிடித்துள்ளது. வாக்குப்பதிவு காலையில் இருந்தே மும்முரமாக நடந்தது.

கேரளாவின் அனைத்து 20 தொகுதிகளிலும் சேர்ந்து 77.66% வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டில் 73.37% மற்றும் 2014 ஆம் ஆண்டில் 74.02% வாக்குப்பதிவு நிகழ்ந்த நிலையில் இது மிகவும் அதிகமாகும். இந்த வாக்குப்பதிவு சதவிகிதம் கடந்த 30 வருடங்களாகவே அதிகரித்து வருகிறது.

இந்த தேர்தலில் 8 தொகுதிகளில் 80%க்கு மேல் வாக்குப்பதிவு நிகழ்ந்துள்ளது. ஆறு தொகுதிகளில் 75%க்கு குறைவாகவும் 4 தொகுதிகளில் 70%க்கு குறைவகவும் வாக்குப்பதிவு நடந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் 80.31% வாக்கு பதிவாகி உள்ளது. கடந்த 2014 ஆம் வருடம் இங்கு 73.29% வாக்குகள் பதிவாகின.

சபரிமலை அமைந்துள்ள பட்டினம்திட்டா தொகுதியில் இந்த முறை 74.19% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. சென்ற 2014 ஆம் வருட தேர்தலில் இந்த தொகுதியில் 66.02% வாக்குகள் பதிவாகின. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களும் சபரிமலை விவகாரம் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு மிகவும் பின்னடைவை அளிக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.