புதுடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் முறைகேடு குற்றம்சாட்டி அவதூறு பரப்ப, தனக்கு ரூ.1.5 கோடி லஞ்சம் தரப்பட்டது என்றும், இதற்கு பின்னால், ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் சதி இருக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார் வழக்கறிஞர் உத்சவ் பெயின்ஸ்.
தனது குற்றச்சாட்டிற்கு வலுசேர்க்கும் வகையில், சிசிடிவி பதிவையும், இதர ஆதாரங்களையும் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தார் உத்சவ் பெயின்ஸ்.
இதனையடுத்து, இந்தப் புகாரை விசாரிக்கும் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வினுடைய நீதிபதி அருண் மிஸ்ரா, இதுதொடர்பாக, சிபிஐ, ஐபி மற்றும் டெல்லி காவல்துறை ஆகியவற்றின் தலைவர்களை நீதிமன்றத்தில் ஆஜராக செய்யுமாறு, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலை கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த மூவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னர், வழக்கறிஞரின் புகார் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.