கொழும்பு
தாக்குதல் குறித்த முன்னெச்சரிக்கை வந்தும் சரிவர விசாரிக்காத இலங்கை ராணுவ செயலர் மற்றும் காவல்துறை தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும் என அதிபர் சிறிசேன கூறி உள்ளார்.
ஈஸ்டர் தினத்தன்று இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள தேவாலயங்கள், சொகுசு ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது, இதில் 350க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர், 500 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக இலங்கை காவல்துறையினர் 58 பேரை கைதுசெய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதை தவிர இலங்கை விமான நிலையம், கொழும்பு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் வெடிக்காத குண்டுகளும் டெட்டனேட்டர்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் லாரி ஒன்று வெடி குண்டுகளுடன் கொழும்புக்குள் வர முயன்ற போது சோதனையில் பிடிபட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட நாடுகல் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்த எச்சரிக்கை குறித்து இலங்கை காவல் துறை தலைவர் ஒரு சுற்றரிக்கை அனுப்பி விட்டு மேல் நடவடிக்கை அல்லது விசாரணை நடத்தவில்லை எனவும் இலங்கை ராணுவ செயலரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
இதனால் இவர்கள் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ள இலங்கை அதிபர் சிறிசேன இவர்களை ராஜினாமா செய்யுமாறு கூறி உள்ளார்.