வாரணாசி
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் தமிழகம் மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 150 மஞ்சள் பயிரிடும் விவசாயிகள் போட்டியிட உள்ளனர்.
இந்தியாவின் பிரத்தியேக விவசாய உற்பத்தி பொருட்களில் மஞ்சளும் ஒன்றாகும். இதை இந்தியாவின் 52 மசாலா பொருட்களில் ஒன்று என மசாலா வாரியம் அறிவித்துள்ளது. ஆயினும் காபி, புகையிலை, பருத்தி மற்றும் தேநீருக்கு உள்ளது போல் மஞ்சளுக்கும் தனி வாரியம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிககை விடுத்து வருவதை அரசு நிறைவேற்றாமல் உள்ளது.
உலகில் ஐந்து நாடுகளில் மஞ்சள் பயிரிடப்பட்டாலும் இந்தியாவே அதன் தாயகம் ஆகும். உலகெங்கும் உள்ள மொத்த மஞ்சள் உற்பத்தியில் தெலுங்கானாவில் உள்ள நிஜாமாபாத் பகுதியில் அதிகம் உற்பத்தி ஆகிறது. இரண்டாவதாக தமிழகத்தில் மஞ்சள் உற்பத்தி அதிகம் உள்ளது. மஞ்சளை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவுக்கு ரூ.22000 கோடி மதிப்புள்ள அந்நிய செலாவணி கிடைத்து வருகிறது.
இந்த மாதம் 11 ஆம் தேதி அன்று நடந்த முதல் கட்ட வாக்குப்பதிவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி வேட்பாளரான கவிதா கல்வகுண்டலா வை எதிர்த்து 180 மஞ்சள் விவசாயிகள் வேட்பு மனு பதிவு செய்தனர். அப்போது கவிதா தாமும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகிய இருவரும் மஞ்சள் வாரியம் அமைக்க மத்திய அரசை கோரியதாகவும் ஆனால் அரசு அதை கவனத்தில் கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
அதை ஒட்டி வரும் 29 ஆம் தேதிக்குள் மஞ்சள் விவசாயிகள் 150 பேர் பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். இதில் தெலுங்கானாவில் இருந்து 50 விவசாயிகளும் தமிழகத்தில் இருந்து 100 விவசாயிகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் நாளைக்குள் வாரணாசி செல்ல உள்ளனர்.
இந்த விவசாயிகளுக்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு விவசாயிகளின் தலைவர் திருப்பதி ரெட்டி, “மோடிக்கு எதிராக போட்டியிடுவது மஞ்சள் விவசாயிகளின் திட்டமாகும். நிஜாமாபாத் விவசாயிகளுக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் எவ்வித உதவியும் புரியவில்லை. ஆனால் எங்களை தூண்டிவிட்டு கவிதாவுக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தனர். ஆகவே நாங்கள் இரு கட்சிகளுக்கும் எதிராக வாரணாசியில் போட்டியிட உள்ளோம்” என தெரிவித்தார்.