மும்பை
போபால் வேட்பாளர் சாத்வி பிரக்ஞா தாகுரின் கர்கரே குறித்த அறிக்கையால் பிரதமர் மோடியின் புகழ் பாதிப்பு அடையும் என சிவசேனா தெரிவித்துள்ளது.
பாஜகவின் சார்பில் போபால் தொகுதி வேட்பாளராக மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாத்வி பிரக்ஞா தாகுர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் சமீபத்தில் தன்னை மாலேகான் வழக்கில் கைது செய்த காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரே தனது சாபத்தால் 26/11 மும்பை தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.
இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்ததால் சாத்வி தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் அதிகார பூர்வ பத்திரிகை சாம்னா தனது தலையங்கத்தில், “மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவரும் போபால் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான சாத்வி பிரக்ஞா தாகுர் தமது சாபத்தால் ஹேமந்த் கர்கரே மும்பை 26/11 தீவிரவாத தாக்குதலில் கொல்லபட்டதாக கூறி உள்ளார்.
பிரதமர் மோடி பாஜக வுக்கு மட்டுமின்றி கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒரு சொத்து ஆகும். அவர் ஒவ்வொரு கூட்டத்திலும் நாட்டுக்காக உயிர் நீத்த தியாகிகளின் புகழை பற்றி பேசி வருகிறார். அது மட்டுமின்றி தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அனைத்து வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தி வருகிறார். தாகுரின் அறிக்கை மோடியின் புகழை பாதிப்பு அடையச் செய்து வருகிறது.
நாங்கள் ஏற்கனவே மாலேகான் வழக்கில் சாத்விக்கு ஆதரவை அளித்துள்ளோம். ஆயினும் தாகுரின் கருத்துக்களுக்கு என்றும் சிவசேனா ஒப்புக் கொள்ளாது. இந்து தீவிரவாதம் என்னும் பெயரில் இந்துக்களை அவமானம் செய்வதையும் இன்னல்களுக்கு உள்ளாக்குவதையும் கண்டிக்கிறோம்.
நாங்கள் மாலேகான் வழக்கில் சாத்விக்கு மட்டுமின்றி மற்றொரு குற்றம் சாட்டப்பட்டவரான பிரசாத் புரோகித் என்பவருக்கும் எதிராக போராடி இருக்கிறோம்.
ஹேமந்த் கர்கரே போல தீவிரவாதிகளை எதிர்த்து உயிர் நீக்கிய தியாகியை தேச விரோதி போல் சித்தரிப்பது அவரை அவமானப்படுத்தும் செயலாகும். நாட்டுக்காக குண்டடி பட்டு மரணம் அடைந்த தியாகி கர்கரேவுக்கு சிவசேனா மரியாதை அளித்ததுடன் அவருக்கு அசோக சக்கர விருது அளித்த போது சாம்னா அதை பாராட்டி உள்ளது” என குறிப்பிட்டுள்ளது.