அமேதி
அமேதி தொகுதியில் காங்கி்ரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வேட்பு மனு ஏற்றுக்
கொள்ளபட்டுள்ளது.
நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உ பி மாநிலத்தின் அமேதி தொகுதியிலும் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தென் இந்திய மாநிலத்தில் ராகுல் காந்தி போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். இதனால் வயநாடு பகுதியில் மக்கள் மத்தியில் ராகுல் காந்திக்கு நல்ல செல்வாக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பலர் போட்டியிட்டு வருகின்றனர். அவர்களில் ஒரு சுயேச்சை வேட்பாளர் ராகுல் வேட்புமனுவை எதிர்த்து தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார். அதில் “ஒரு நிறுவன இணையதளத்தில் ராகுல் தாம் பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி தனது கல்வித் தகுதியையும் தவறாக பதிந்துள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து இன்று தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் ”தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி வேட்பாளரின் வேட்புமனு மீது கிளம்பும் ஆட்சேபனை மீது பாதிக்கப்பட்டவரை அழைத்து அதன் அதிகாரி விசாரிக்க வேண்டும். ஆனால், அதன் உண்மைத்தன்மையை ஆணையம் நேரடியாக விசாரிக்காமல், ஆதாரங்கள் மட்டும் கேட்க முடியும்.
இந்த ஆதாரங்கள் பொய் என தெரிந்தால் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்திற்கு அணுகுவது தான் முறையாகும். எனினும், வேட்பாளர் மனு மீது தேர்தல் அதிகாரி ஆட்சேபம் எழுப்ப முடியாது. எனவே ராகுல் காந்தியின் வேட்பு மனு ஏற்கப்படுகிறது” என தெரிவித்துள்ளது.