அகமதாபாத்:

குறைந்த விலை மற்றும் ஆதரவு தராத அரசின் போக்கால் அதிருப்தி அடைந்துள்ள பால் விவசாயிகளின் அதிருப்தியை, தங்களுக்கு சாதகமாக காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டுள்ளது.


கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வர்கீஸ் குரியன் தலைமையிலான குஜராத் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனம் வெண்மை புரட்சியை செய்தது.

இதன் சார்பில் தொடங்கப்பட்ட அமுல் நிறுவனம் உலகின் மிகப் பெரிய பால் உற்பத்தி நிறுவனமாக திகழ்ந்தது.

ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.  இந்தியாவின் பெரிய நிறுவனமாக அமுல் இருந்தாலும், குறைந்த விலை மற்றும் அரசின் ஆதரவு இல்லாத போக்கால் குஜராத் பால் விவசாயிகள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

மக்களவை தேர்தலில் பால் உற்பத்தியாளர்கள் பிரச்சினை முக்கியமானதாகியுள்ளது. விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், நுகர்வோருக்கும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

அத்தியாவசிய பொருளான பால் விலை உயர்வு ஒவ்வொருவரையும் பாதித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளை ஆளும் பாஜகவை, இந்த பிரச்சினையை மையமாக வைத்தே காங்கிரஸ் எதிர்கொண்டு வருகிறது.

நாடு முழுவதும் பால் உற்பத்தி துறையின் மதிப்பீடு ரூ.6 லட்சம் கோடியாக உள்ளது. ஆண்டுதோறும் இதன் வளர்ச்சி 10 சதவீதமாக உள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு குஜராத்தை வறட்சி மாநிலமாக அம் மாநில அரசு அறிவித்தாலும், தங்களுக்கு எவ்வித மானியமும் அளிக்கவில்லை என்று பால் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தண்ணீர் ரூ. 22 – க்கு விற்கப்படுகிறது. அதே விலைக்குத் தான் பாலும் விற்கப்படுகிறது. இதனால் பால் விவசாயிகள் பலர் கிராமங்களை விட்டு நகரங்களை நோக்கி சென்றுவிட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.