சென்னை

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தரவிறக்கம் செய்ய தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலியில் இருந்து 60 லட்சம் வீடியோக்கள் அகற்றப்பட்டுள்ளன.

உலகெங்கும் பலரின் கவனத்தை கவர்ந்துள்ள செயலிகளில் டிக்டாக் செயலியும் ஒன்றாகும். இந்த செயலியில் பலர் தனது நடிப்பு மற்றும் நடனத் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த செயலிக்கு இந்தியாவிலும் நல்ல வரவேற்பு உள்ளது. அதே நேரத்தில் இந்த செயலியில் பல தவறான வீடியோக்கள் உள்ளதாக புகார் எழுந்தன.

இதை ஒட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த செயலியை தடை செய்ய ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் ”இந்த சீன செயலியை இந்தியாவில் சுமார் 5.4 கோடி பேர் உபயோகித்து வருகின்றனர். இதில் பல வீடியோக்கள் ஆபாசமாக உள்ளன. மிகவும் தவறான வீடியோக்களும் பதியப்பட்டுள்ளன.

எனவே இந்த செயலியை தடை செய்ய உயர்நீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது. அத்துடன் இனி இந்த செயலியை யாரும் தரவிறக்கம் செய்யாமல் இருக்க இதை ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்க உத்தரவிடப்படுகிறது” என தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.  அதன் படி கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோரில் டிக்டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த செயலியை முழுவதுமாக தடை செய்யக் கூடாது என கோரிக்கை விடுத்து ஒரு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் டிக்டாக் செயலியில் இருந்த ஆட்சேபகரமான 60 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இனி இந்த செயலிக்கு தடை விதிக்க தேவை இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளது.