புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், ரஃபேல் மோசடி குறித்து விசாரணை நடத்தப்படும் மற்றும் ஊடகங்கள் எங்களின் வெற்றி வாய்ப்பை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
ஒரு நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது, “மக்கள் நாடு முழுவதும் பாரதீய ஜனதா ஆட்சியின் மீது பெரும் ஏமாற்றத்திலும் கோபத்திலும் உள்ளனர். எனவே, காங்கிரஸ் கட்சி இந்த மக்களவைத் தேர்தலில் சிறப்பாக செயல்படும்.
ஊடகங்களின் கணிப்பைவிட, காங்கிரஸ் கட்சி பெறுகின்ற வெற்றியானது பெரிதாக இருக்கும். தமிழகத்தில் நாங்கள் அமைத்துள்ள கூட்டணி முழு வெற்றிபெறும். குஜராத் மாநிலத்திலும் எங்களுக்கு பெரிய வெற்றி கிடைக்கும். பீகாரிலும் எங்கள் கூட்டணி சிறப்பான முடிவுளைப் பெறும்.
வேலையில்லா திண்டாட்டம், வேளாண்மை அவலம் மற்றும் ஊழல் போன்றவை நாட்டில் மிகப்பெரிய பிரச்சினைகளாக உள்ளன. இதையெல்லாம் பேசுவதற்கு பிரதமர் தயாராக இல்லை.
ஆனால், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில், நாங்கள் ஆட்சியில் அமர்ந்த 72 மணிநேரங்களில், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தோம்.
மத்திய அரசின் தரப்பிலிருந்து வரும் அழுத்தங்களாலேயே, ஊடகங்கள் சார்பில் காங்கிரசின் வெற்றி விகிதத்தை குறைத்து செய்தி வெளியிடுகிறார்கள்” என்றார்.
– மதுரை மாயாண்டி