மணந்தவாடி:

ராகுல் காந்தி இதயப்பூர்வமாக ஜனநாயகத்தை நம்புகிறார். பாஜகவோ நாட்டை துண்டா நினைப்பதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு உத்திரப் பிரதேச மாநில பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி, உத்திரப் பிரதேசம் மாநிலம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதனையடுத்து, ராகுல் காந்தி போட்டியிடும் கேரளாவிலும் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, “வாக்களித்து அதிகாரத்தில் அமர வைத்த மக்களின் நம்பிக்கையை பாஜக அரசு இழந்துவிட்டது. நாட்டைத் துண்டாடும் வேலையை மட்டுமே கடந்த 5 ஆண்டுகளாக பாஜக செய்து வருகிறது.

இது எனது நாடு. இந்த மலைகள் எல்லாம் என் நாட்டுக்கு சொந்தமானவை. கோதுமை விளையும் உத்திரப் பிரதேசம் என் நாடு. தமிழ்நாடு என் நாடு. குஜராத் என் நாடு. வடகிழக்கு மாநிலங்கள் என் நாடு.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் நாட்டை துண்டாடும் வேலையை மட்டுமே பாஜக அரசு செய்து வந்துள்ளது. ஆட்சியை கைப்பற்றுவது மட்டுமே பாஜக-வின் நோக்கமாக உள்ளது. மக்களைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை.

ராகுல்காந்தி ஜனநாயகத்தை இதயப்பூர்வமாக நம்புகிறார். ஆனால்,பாஜகவினரோ இந்த நாட்டை துண்டாட நினைக்கின்றனர் என்றார்.