டோக்யோ

முதல் முறையாக ஒரு பார்வை திறனற்ற ஜப்பானிய மாலுமி தனது பசிபிக் கடல் பயணத்தை இரு மாதங்களில் முடித்துள்ளார்.

ஜப்பானை சேர்ந்த மாலுமியான இவாமோட்டோ பார்வை திறன் அற்றவர் ஆவார். ஆயினும் இவருக்கு கடற்பயணங்களில் சாதனை செய்வதில் மிகவும் ஆர்வம் கொண்டவர் ஆவார். தனது 16 ஆம் வயதில் பார்வையை இழந்த இவர் பார்வையற்றவர்கள்ன் நலனுக்காக நிதி திரட்டி வருகிறார்.

இவர் சுமார் ஆறு வருடம் முன்பு ஒரு உல்லாசப் படகு ஒன்றின் மூலம் பசிபிக் கடலை கடக்க முடிவு செய்து பயணத்தை தொடர்ந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக இவரது படகு ஒரு சுறாமீன் தாக்கியதால் சரிந்ததில் இவர் பயணத்தை கை விட நேர்ந்தது. முயற்சியில் தளர்ச்சி அடையாத இவாமோட்டோ மீண்டும் பயணத்தை தொடங்க முயன்றார்.

கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று தனது பயணத்தை மீண்டும் தொடர்ந்தார். சான் பிரான்சிஸ்கோ நகரில் இவர் தொடங்கிய பயணத்தின் போது இவருக்கு திசைகள் குறித்து தெரிவிக்க டக் ஸ்மித் என்னும் அமெரிக்கர் உடன் இருந்தார். இவர் இரண்டு மாதங்களில் பசிபிக் கடலை கடந்து ஜப்பான் நாட்டின் ஃபுகுன்ஷிமா துறைமுகத்தை அடைந்துள்ளார்

இது குறித்து இவாமோட்டோ, “எனது வெகுநாள் கனவு இப்போது நிறைவேறி உள்ளது.” என மகிழ்வுடன் தெரிவித்துள்ளார். ஒரு பார்வை இழந்த மாலுமி பசிபிக் கடலை கடந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.