மும்பை

ஜெட் ஏர்வேஸ் தனது சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியதால் பணி இழந்தோரில் நூற்றுக்கணக்கானோருக்கு ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் பணி வழங்கி உள்ளது.

ஜெட் ஏர்வேஸ் கடன் அதிகரித்து கடும் நிதி நெருக்கடியை சந்தித்தது. அதன் முக்கிய கடன் அளித்த வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்த பங்குகளை வேறு நிறுவனங்களுக்கு விற்க முயற்சி செய்தது. எதிர்பார்த்த விலை கிடைக்காததால் அந்த முயற்சி தடைபட்டது. தினசரி செலவினங்களுக்கும் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவைகள் அனைத்தையும் கடந்த புதன் கிழமை தற்காலிகமாக நிறுத்தி விட்டது.

இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் பணி இழந்த ஊழியர்களுக்கு உதவ முன் வந்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகள், விமான ஊழியர்கள், தொழில்நுட்ப மற்றும் விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர்.

இவர்களில் பலருக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தற்போது பணி வழங்க உள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 100 விமானிகள் 200 விமான ஊழியர்களுக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஏற்கனவே பணி வழங்கி உள்ளது தெரிந்ததே. தற்போது மேலும் 24 புதிய விமான சேவைகளை அறிவித்துள்ள ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அதற்காக ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்களை பணி அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.