டில்லி:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நாடு முழுவதும் தேர்தல் களம் பரபரப்பாகி இயங்கி வரும் நிலையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வர்த்தகர்களுக்கு  பிணையின்றி (ஜாமின் இல்லாமல்)  ரூ.50 லட்சம் வரை கடன், வர்த்கர்களுக்கு பென்சன் போன்றவை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

நாட்டில் ஜிஎஸ்டியை அமல்படுத்தி சிறுதொழில் உள்பட பெருந்தொழில்களையும்,  மக்களையும் கடுமையான இன்னல்களுக்கு உள்ளாக்கிய மோடி, தற்போது  ஆட்சியை பிடிக்கும் நோக்கில், வர்த்தகர்களுக்கு ஜாமினின்றி ரூ.50லட்சம் கடன் கொடுப்பதாக ஆசை காட்டி வருகிறார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஏற்கனவே 2 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. மத்தியில் ஆட்சியை மீண்டும் பிடிக்க கடுமையாக போராடி வரும் பாரதிய ஜனதா டில்லியில்  நடைபெற்ற வர்த்தகர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி,   பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

தலைநகர் டெல்லியில் உள்ள தல்காதோரா மைதானத்தில் வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி,  வர்த்தகர்கள், வியாபாரிகள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பு. உங்களின் பங்களிப்பு இல்லை என்றால் இந்திய பொருளாதாரம் உலக அரங்கில் 2 மடங்கு அதிகரித்து இருக்காது என்று வர்த்தகர்களுக்கு ஐஸ் வந்து பேசிய நிலையில், காங்கிரஸ் ஆட்சி பற்றியும் குறை கூறினார்.

காங்கிரஸ் ஆட்சி பண வீக்கத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டது. அதன் காரணமாகவே வர்த்தகர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர் என்றும்,  பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் தொழில் வளர்ச்சி வீழ்ச்சியடைந்ததாக குற்றம் சாட்டியவர்  கடந்த 5 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் வியாபாரிகளுக்கு கடன் பெறுவதற்கான வசதிகள் எளிமையாக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், முத்ரா திட்டத்தில் வர்த்தகர்களுக்கு உடனடியாக கடன் வழங்கி வருவதாக தெரிவித்தவர், ஒரு லட்சம் தொழில் முனைவோருக்கு  ரூ.1 கோடி வரையிலான கடனை வெறும் 59 நிமிடத்தில் கிடைக்க வழிவகை செய்து இருப்பதாகவும் பெருமிதமோடு கூறினார்.

தொடர்ந்து பேசிய மோடி,  உங்களின் (வர்த்தகர்களின்)  ஓய்வில்லாத உழைப்பு என்னை மிகவும் கவர்ந்துள்ளது என்றவர், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய வர்த்தகர் நல வாரியம் அமைக்கப்படும் என்றும், அதே வேளையில், வர்த்தகர்களுக்கு எந்த பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன் உதவி அளிக்கப்படும். கடன் அட்டையும் அளிக்க இருக்கிறோம், வர்த்தகவர்களுக்க பென்சன் திட்டம் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி மூலம் வர்த்தகத்தையும், சிறுதொழில்களையும் அடியோடு நாசமாக்கிய மோடி, தற்போது மீண்டும் ஆட்சியை பிடிக்க கடன் தரப்படும் என ஆசை வார்த்தி கூறி வருவதாக பெரும்பாலான வர்த்தகர்கள் முனுமுனுத்தனர்.