புதுடெல்லி: வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கிலிருந்து, குற்றப் பதிவேடுகள் குறித்த விளம்பர செலவினங்களை நீக்கிவிட வேண்டுமென்ற கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்துவிட்டது.
தற்போது, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் தேர்தல் செலவு, அதிகபட்சம் ரூ.70 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த செலவில், ஒரு வேட்பாளர் தன் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் இருக்கிறதா என்று பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யும் விளம்பர செலவும் சேர்க்கப்படுகிறது.
இந்த நடைமுறையைத்தான் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் ஆட்சேபிக்கின்றன. மேலும், வேட்பாளரின் செலவு கணக்கை, கட்சிகளின் கணக்கில் சேர்க்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தன.
முதற்கட்ட தேர்தலுக்கு முன்பாக, தேர்தல் கமிஷனுடன் நடந்த சந்திப்பில், கட்சிகள் சார்பில் இவை வலியுறுத்தப்பட்டன. ஆனால், கட்சிகளின் கோரிக்கை தேர்தல் கமிஷன் சார்பில் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
– மதுரை மாயாண்டி