டில்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தங்கள் கட்சிக்கு துரோகம் இழைத்ததாக தாம் கருதவில்லை என கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் இந்த மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளார். கேரள மாநிலத்தில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகவும் ஆதரவு உள்ளது. அத்துடன் தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. எனவே ராகுல் காந்தி போட்டியிடுவது  குறித்து கேரள கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், “ராகுல் காந்தி வயநாடு தொகுதியிலும் ஏன் போட்டியிடுகிறார் என்பதை அவருடைய கட்சியினர் தான் சொல்ல வேண்டும். இந்திரா காந்தி காலத்தில் இருந்தே அவர்கள் குடும்பம் வட இந்தியாவில் ஒரு தொகுதியிலும் தென் இந்தியாவில் ஒரு தொகுதியிலுமாக இரு தொகுதிகளில் போட்டி இடுவது வழக்கம்.  ஏற்கனவே இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் இது போல் போட்டியிட்டுள்ளனர்.

ஆனால் இப்போது ராகுல் காந்தி இடது சாரிகளுக்கு எதிராக போட்டியிட உள்ளது புதுமையாக உள்ளது. பாஜகவுக்கு எதிரான இரு கட்சிகளே தற்போது ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ள்து. பாஜகவுக்கு எதிரான கூட்டணி குறித்து ஏற்கனவே பல முறை நாங்கள் சோனியா காந்தி தலைமையில் பேசி உள்ளோம். காங்கிரஸ் இன்னும் எங்களை ஒரு ஆலோசகராக கருதி வருவதுடன் விரோத மனப்பான்மை இன்றி எங்கள் நட்பு உள்ளது.

ஏற்கனவே நான் கூறியபடி இந்த முடிவு காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவு. ஆனால் மற்ற மாநிலங்களில் எங்கள் கூட்டணி தொடர்ந்து வருகிறது. எனவே ராகுல் காந்தி எங்களுக்கு துரோகம் இழைக்கவில்லை எனவே சொல்ல வேண்டும். தேர்தலுக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை இப்போது கூற முடியாது. அது குறித்து அப்போது பார்த்துக் கொள்வோம்” என தெரிவித்துள்ளார்.