பாரதீய ஜனதாவின் நிறுவனர்களுள் ஒருவரும், அக்கட்சியின் இரண்டாவது தலைவருமான லால்கிஷன் அத்வானி மற்றும் இன்னொரு நிறுவனரும், அக்கட்சியின் மூன்றாவது தலைவருமான முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தாங்கள் புறக்கணிக்கப்பட்டதை அந்த இரண்டு மூத்த தலைவர்களும், ஏற்றுக்கொண்டு அமைதியாக ஒதுங்கும் நிலையில் இல்லை. அத்வானிக்கு குஜராத் மாநிலம் காந்திநகரிலும், முரளி மனோகர் ஜோஷிக்கு உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரிலும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அத்வானியிடமிருந்து வலைப்பதிவு மூலமாக எதிர்ப்பு எழுந்துள்ளது. “பாரதீய ஜனதா கட்சியை அரசியல்ரீதியாக எதிர்ப்பவர்கள், தேச துரோகிகள் அல்ல” என்று அவர் எழுதியிருந்தார். அவரின் கருத்து, மோடி – அமித்ஷா கூட்டணியின் மீதான தாக்குதலாக பார்க்கப்படுகிறது. அத்வானியின் கருத்தை பல எதிர்க்கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
தற்போது முரளி மனோகர் ஜோஷியிடம் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் பேசிவருகின்றனர் என்றும், மோடிக்கு எதிராக ஜோஷியை வாரணாசி தொகுதியில் நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன,
மேலும், முரளி மனோகர் ஜோஷி, மோடி – அமித்ஷா கூட்டணியை தாக்கும் வகையில் ஒரு புத்தகம் எழுதவுள்ளதாகவும், அதில் குரோனி கேபிடலிஸம் என்றழைக்கப்படும் கூட்டுக்கொள்ளை குறித்து குறிப்பிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே, இரண்டு மூத்த தலைவர்களை சுற்றிய செய்திகள், மோடி – அமித்ஷா கூட்டணிக்கு மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் தலைவலியாக மாறியுள்ளது என்கின்றனர்.
– மதுரை மாயாண்டி