டில்லி
ரெயில்வேயில் அளிக்கப்பட்டு வரும் தேநீர் காகித கோப்பைகளில் நானும் காவல்காரன் என அச்சடிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடியை “காவலர் திருடன் ஆனார்” என தொடர்ந்து விமர்சித்ததை அடுத்து மோடி “நானும் காவல்காரன்” (மைன் பி சவுக்கிதார்) என ஹேஷ்டாக்கை பரப்பினார். அதை ஒட்டி பல பாஜக தலைவர்கள், தொண்டர்கள், அனுதாபிகள் உள்ளிட்டோர் தங்கள் பெயருக்கு முன்பு சவுக்கிதார் (காவல்காரன்) என இணைத்துக் கொண்டனர்.
தற்போது இந்திய ரெயில்வேயில் வழங்கப்படும் காகித தேநீர் கோப்பையில் நானும் காவல்காரன் (மைன் பி சவுக்கிதார்) என அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த கோப்பை தனியார் விற்பனையாளரால் கதகோடம் சதாப்தி ரெயிலி8ல் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது அதே கோப்பைகள் லூதியானா சதாப்தி ரெயிலிலும் வழங்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன. இது தேர்தல் நடைமுறை விதிகளை மீறுவதாக சந்தேகம் எழுந்தது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகியது.
இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் ”இந்த கோப்பைகள் தனியார் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. அந்த கோப்பையில் பணம் கொடுத்து இந்த விளம்பரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. உடனடியாக அந்த கோப்பைகள் வழங்குவது நிறுத்தப்படும். அந்த நிறுவன ஒப்பந்ததாரர் மற்றும் மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என அறிவித்துள்ளனர்.