கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டி யிடுவது உறுதியாகி விட்டது.
டெல்லியில் இன்று நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும்..
அமேதியில் ராகுல் போட்டியிட்டாலும்- தெற்கே உள்ள ஒரு மாநிலத்திலும் அவர் நிற்க வேண்டும் என்பது –தென்னகத்தில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆசை.
வடக்கு பகுதிக்கும்- தெற்கு பகுதிக்கும் ‘நட்பு பாலம்’ அமைப்பதற்கு வழி வகுக்கும் என்பது உள்ளூர் காங்கிரசாரின் எண்ணம்.
அதனை செயல் படுத்தும் முடிவுக்கு வந்து விட்டார்- ராகுல்…
வயநாடு அவரது தேர்வு ..2009 ஆம் ஆண்டில் புதிதாக இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. .அப்போது நடந்த தேர்தலிலும், பின்னர் 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஷாநவாஸ் வென்றுள்ளார்.கடந்த ஆண்டு அவர் இறந்ததால் அந்த தொகுதி காலியாக உள்ளது.
வனங்கள் சூழ்ந்துள்ள வயநாட்டில் ராகுலின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
2009 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஷாநவாஸ் ஒரு லட்சத்து 53 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.கடந்த முறை சுமார் 21 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வெல்ல முடிந்தது.
இரு முறையும் வயநாடு தொகுதியில் இரண்டாம் இடம் பிடித்தது –இந்திய கம்யூனிஸ்ட் கட்சி..ராகுல் போட்டியிடும் பட்சத்தில்- இந்த வாக்கு வித்தியாசம் ஒரு பொருட்டே அல்ல என்பது காங்கிரசார் வாதம்
வயநாடு தொகுதிக்கு கோழிக்கோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்..
ராகுல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் சித்திக் போட்டியில் இருந்து விலகி கொள்வார்.
பா.ஜ.க.இந்த தொகுதியை கூட்டணி கட்சியான பாரத் தர்ம ஜனசேனாவுக்கு ஒதுக்கியுள்ளது.
ராகுல் நிற்கும் பட்சத்தில் –அந்த கட்சியிடம் இருந்து தொகுதியை வாங்கி பா.ஜ.க.வே போட்டியிடும்.
அமேதியில் ராகுலை எதிர்த்து நிறுத்தப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி ரானியே- வயநாட்டிலும் நிற்பார் என்று பா.ஜ.க.வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் வயநாட்டில் போட்டியிட்டால் அதன் தாக்கம் கேரளா முழுவதும் எதிரொலிக்கும் என்பதால் ராகுலை இங்கே நிறுத்த வேண்டாம் என இடதுசாரிகள் மூத்த காங்கிரஸ் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
—பாப்பாங்குளம் பாரதி