கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் எனும் குடும்பக்கட்சியை நிறுவி- குடும்ப உறுப்பினர் களை பதவியில் வைத்து அழகு பார்த்து வருபவர் – தேவகவுடா.
முதல்-அமைச்சர் ,பிரதமர் என உச்ச பதவிகளில் இருந்தும் பதவி மோகம் கொஞ்சமும் குறையாத அரசியல் வாதி.ஹாசன் மக்களவை தொகுதியில் இருந்து 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்-தேவகவுடா.
அந்த தொகுதியை இந்த முறை ஒரு பேரனுக்கும் , மற்றொரு தொகுதியான மாண்டியாவை இன்னொரு பேரனுக்கும் தாரை வார்த்துவிட்டார்.
மாண்டியாவில் அந்த பேரன் நிகிலை எதிர்த்து நடிகை சுமலதா போட்டியிடுகிறார்.
சுமலதாவை நேரடியாக பா.ஜ.க.ஆதரிக்க- உள்ளூர் காங்கிரசார் மறைமுகமாக ஆதரிக்கிறார்கள்.
இதனால் நிகில் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதா ? வேண்டாமா என ஊசலாட்டத்தில் இருந்த தேவகவுடா – துமகுரு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
.ஆனால் அந்த தொகுதியை விட்டுத்தர முடியாது என அடம் பிடிக்கிறார்- காங்கிரஸ் எம்.பி.முத்தனம் கவுடா.
காங்கிரஸ் கூட்டணியில் துமகுரு தொகுதி–மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் துமகுரு தொகுதியில் இப்போதைய எம்.பி.முத்தனம் கவுடாவுக்கு சீட் மறுத்துள்ளது- காங்கிரஸ் மேலிடம்.
‘டெல்லி முடிவு பற்றி கவலை இல்லை.துமகுரு தொகுதியில் நான் நாளை வேட்புமனு தாக்கல் செய்யப்போகிறேன்.சிட்டிங் எம்.பி.க்கு டிக்கெட் மறுப்பது எந்த ஊர் நியாயம் ? தேர்தலில் .போட்டி யிடுவதில் இருந்து யாரும் என்னை தடுக்க முடியாது’’ என்று போர்க்கொடி தூக்கியுள்ளார் –இந்த கவுடா.
இதனால் தேவகவுடா நிம்மதி இழந்து காணப்படுகிறார்.
கடைசி கட்ட முயற்சியாக முத்தனம் கவுடாவை சமாதானப்படுத்த காங்கிரஸ் கட்சி சில ஏற்பாடுகளை செய்து வருகிறது.
—பாப்பாங்குளம் பாரதி