புதுடெல்லி: தற்போது 91 வயதாகும் அத்வானிக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், பாரதீய ஜனதாவை சேர்ந்த வேறு சில மூத்த தலைவர்களுக்கும் அந்த நிலை ஏற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; நடப்பு நாடாளுமன்றத்தில் கான்பூர் தொகுதி உறுப்பினராக இருக்கும் முரளி மனோகர் ஜோஷிக்கும், அத்வானி போன்றே வாய்ப்பு மறுக்கப்படலாம் என தகவல்கள் வருகின்றன.
எதிர்காலத்திற்காக தயார்படுத்தப்படும் வகையில், இளம் தலைமுறையினருக்கு வழிவிடுவதற்கான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினுடைய திட்டத்தின்படியே, மூத்த தலைவர்களுக்கு இடம் மறுக்கப்படுகிறது.
மேலும், முன்னாள் உத்ரகாண்ட முதல்வர் பி.சி.கந்தூரி மற்றும் பகத்சிங் கோஷ்யாரி, கல்ராஜ் மிஸ்ரா, கரியா முண்டா, தற்போதைய மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், முன்னாள் இமாச்சலப் பிரதேச முதல்வர் சாந்த குமார் உள்ளிட்ட பலருக்கும் இத்தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.
வாஜ்பாய், அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகிய மூவரும், அமித்ஷா கட்சித் தலைவரான பின்னர், பாரதீய ஜனதா கட்சியின் உயர்மட்ட அமைப்பான பார்லிமென்டரி போர்டிலிருந்து கழற்றி விடப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட விசித்திர கட்சி அமைப்பான ‘மார்க் தர்ஷன் மண்டல்’ உறுப்பினர்களாக ஆக்கப்பட்டார்கள் என்பது நினைவுகூறத்தக்கது.
– மதுரை மாயாண்டி