இன்று இசை மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படும் முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த நாள். இவர் 1775ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி திருவாரூரில் பிறந்தார்.
பங்குனி மாதம் கார்த்திகை நட்சத்திர நன்னாளில், 1776ம் வருடத்தில் பிறந்தார் முத்துசுவாமி தீட்சிதர். அப்பா ராமசுவாமி தீட்சிதர். அம்மா சுப்புலட்சுமி. வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள முருகப்பெருமானின் திருநாமம் முத்துக்குமார சுவாமி. மிகுந்த வரப்பிரசாதி. அவரின் அருளால் பிறந்த குழந்தை என்பதால், முத்துசுவாமி என்றே பெயரிட்டனர்
முத்துசுவாமி இசையுடனே வளர்ந்தார். அப்பாவே இவருக்குக் குருவானார். அவரிடம் தெலுங்கு, சம்ஸ்கிருதம், இசை முதலான கலைகளைப் பயின்றார் சிறுவயதிலேயே வேதம், சாஸ்திரம், தர்க்கம், வியாகரணம் (இலக்கணம்), காவியம் ஆகிய அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். திருவாரூர் கோவிலில் உள்ள அனைத்து கடவுள்கள் மீதும் பாடல் இயற்றியுள்ளார்.
அப்பாவைப் போலவே வேதங்களிலும் மந்திர ஜபங்களிலும் சாஸ்திரங்களிலும் பாண்டித்யத்துடன் திகழ்ந்தார். இனிமையாகப் பாடுவதிலும் வீணை வாசிப்பதிலும் தனித்த திறமையுடன் விளங்கி னார். சிதம்பரநாத யோகி என்பவரிடம் ஸ்ரீவித்யா மகாமந்திரத்தை தீட்சையாகப் பெற்று, தினமும் உச்சாடனம் செய்து வந்தார். பிறகு அவருடன் காசியம்பதிக்குச் சென்றார். விசாலாட்சி சமேத விஸ்வநாதரை தரிசித்தார்.
காசியில் கர்நாடக சங்கீதத்துடன் இந்துஸ்தானி சங்கீதமும் கற்றறிந்தார். அதையடுத்து குருவின் அருள்வாக்கின்படி, திருத்தணி முருகப்பெருமானைத் தரிசித்தார். அப்படி மலையேறும் போது ஒரு கிழவர் எதிரில் வந்தார். முத்துசுவாமி வாயைத் திற என்றார். கற்கண்டை ஊட்டிவிட்டு ஆசி வழங்கி சட்டென்று மறைந்தார். அந்தத் தருணத்தில், மயிலின் மீதேறிச் செல்லும் முருகப் பெருமானைத் தரிசித்தார் முத்துசுவாமி தீட்சிதர்.
இதன் பின்னர், மாயா மாளவ கெளளையில் முதல் கிருதியை இயற்றினார். தன் ஒவ்வொரு பாடலிலும் குருகுஹ எனும் சொல்லாடலைக் கையாண்டார். இவர் முருகனையே தன் குருவாக நினைத்தார். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதத்தில் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.
திருத்தணியில் இருந்து அப்படியே காஞ்சியம்பதிக்கு வந்தார். காமாட்சி அன்னையின் கனிவிலும் கருணையிலும் மெய்சிலிர்த்தார். ஏகாம்பரேஸ்வரரின் தரிசனத்தில் மெய்யுருகிப் போனார்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் தரிசனம் செய்து, சிதம்பரம், சீர்காழி என பல தலங்களைத் தரிசித்துவிட்டு, ஆரூர் எனப்படும் திருவாரூருக்கு வந்தார். ஆரூர்க் கோயிலும் கமலாலயக் குளமும் அவரை என்னவோ செய்தன. அங்கிருக்கும் தெய்வங்களுக்கு தனித்தனியே கிருதிகளை இயற்றினார். அவரின் பாடல்களைக் கேட்கக் கேட்க, உருகிப் போனார்கள் மக்கள்.
பஞ்சலிங்க ஸ்தலக கிருதி, கமலாம்பா நவா வர்ணம், அபயாம்பா நவா வர்ணம், சிவ நவா வர்ணம், நவக்கிரகக் கிருதிகள் என இயற்றிய பாடல்கள் அனைத்தும் இன்றைக்கும் இவரின் சாந்நித்தி யத்தையும் தெய்வ கடாக்ஷத்தையும் உணர்த்துகின்றன.
குகனின் அருளாலும் சிவனின் பேரருளாலும் இன்றைக்கும் அழியாப் புகழுடன் மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றி வணங்கப்படுகிறார்.
1976ம் ஆண்டு முத்துசாமி தீட்சிதரின் உருவப்படம் பொறித்த ஸ்டாம்ப் வெளியிட்டு மத்திய அரசு அவருக்கு கவுரவம் சூட்டியது.
பஞ்ச பூதங்கள், தெய்வங்கள், நவகிரகங்கள், புண்ணிய தீர்த்தங்கள், மொழிகள், மாயை குறித்து பாடல்கள் இயற்றியுள்ளார். நவாவர்ணக் கீர்த்தனைகள், பஞ்சலிங்க ஸ்தல கிருதிகள், கமலாம்பா நவாவர்ணம், அபயாம்பா நவாவர்ணம் உள்ளிட்ட பல கீர்த்தனை தொகுப்புகளை இயற்றியுள்ளார். அரிதான, அதிகம் பயன்படுத்தப்படாத ராகங்களிலும்கூட கீர்த்தனைகள் பாடிய முத்துசுவாமி தீட்சிதர் தனது 60வது வயதில் (1835) மறைந்தார்.